பாஜக எதிர்பார்த்தது போலவே உதயநிதியின் சர்ச்சை பேச்சினை ஒட்டி, இந்தியா கூட்டணியில் அவருக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன. அந்த பட்டியலில் இன்று சேர்ந்திருக்கிறது, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சில விஷயங்களை எதிர்க்க முடியாது; ஒழிக்க வேண்டும். டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்றவற்றை நம்மால் எதிர்க்க முடியாது; அவற்றை ஒழிக்க வேண்டும், அப்படித்தான் சனாதனத்தை எதிர்ப்பதை விட, அதை ஒழிக்கவே வேண்டும்” என பேசியிருந்தார்.
இது இந்தியாவின் பெரும்பான்மையினரான இந்து மக்களுக்கு எதிரானதாகவும், இந்துக்களை கொல்லத் தூண்டுவதாகவும் அமைந்திருப்பதாக பாஜக பிரச்சாரம் செய்தது. ’திமுகவின் குரலை அதன் நட்புக் கட்சியான காங்கிரஸ் ஆதரிக்கிறதா, இந்தியா கூட்டணியின் கருத்தும் இதுதானா?’ என்றெல்லாம் பாஜக சீற்றம் காட்டியது.
பாஜக எதிர்பார்த்ததுபோலவே இந்தியா கூட்டணி கட்சிகள் மத்தியில் உதயநிதியின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா போன்றவை உதயநிதியின் சனாதன சர்ச்சைக்கு எதிராக கருத்து தெரிவித்தன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ”எவரும் எந்த ஒரு தரப்பினரையும் புண்படுத்தும் வகையில் கருத்துக் கூறக்கூடாது என்பது எனது வேண்டுகோள். வேற்றுமையில் ஒற்றுமையை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதுபோன்ற கருத்துகளை இங்கே கூறக்கூடாது. இந்த கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றார்.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத் இன்று(செப்.7) பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, “உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். அவரது கருத்தை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். இதுபோன்ற கருத்துக்களை அவர் தவிர்க்க வேண்டும். இது திமுகவின் பார்வையாகவோ அல்லது உதயநிதியின் தனிப்பட்ட பார்வையாகவோ இருக்கலாம். சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, “எங்கள் மீது தாக்குதல் நடத்த பாஜகவுக்கு இப்படி வெடிகுண்டுகளுக்கு நிகரான வாய்ப்புகளை தரக்கூடாது. மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர், அவரை நாடே உற்று நோக்குகிறது. அவர் எங்களுடன் ஒரு போரில் பங்கேற்றிருக்கிறார். எனவே, அவருக்கு நெருங்கியவர்கள் தங்கள் வார்த்தைகளில் கவனம் வேண்டும்” என்றும் சஞ்சய் ராவத் கோரியுள்ளார்.
+ There are no comments
Add yours