பாட்னா: அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்களுக்கு தேர்தல் வியூக சேவைகளை வழங்கும்போது ரூ.100 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலிப்பதாக ஜன் சூரஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் வரவிருக்கும் பிஹார் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது இந்த தகவலை வெளியிட்டார். பெலகஞ்சில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர், தனது பிரச்சாரங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து அடிக்கடி கேள்வி கேட்பது பற்றி பதிலளித்தார்.
அவர் பேசுகையில், “வெவ்வேறு மாநிலங்களில் பத்து அரசாங்கங்கள் எனது உத்திகளால் ஆட்சியமைத்துள்ளன. எனது பிரச்சாரத்திற்காக மேடைகள் மற்றும் பந்தல்களை அமைக்க என்னிடம் போதுமான பணம் இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் மிகவும் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? பிஹாரில் என்னிடம் கேட்பது போல் நிதி ஆதாரம் பற்றி யாரிடமும் கேட்கப்பட்டதே இல்லை. ஒரே ஒரு தேர்தலில் யாருக்காவது அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இதுபோன்ற ஒரு தேர்தல் ஆலோசனையின் மூலம் எனது பிரச்சாரத்திற்கு தொடர்ந்து நிதியளிக்க முடியும்” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பிஹாரில் பெலகஞ்ச் தவிர, இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தாராரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அந்தந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் இந்த 4 இடங்களும் காலியாகின.
ஜன் சூரஜ் கட்சி சார்பாக பெலகஞ்ச் தொகுதியில் முகமது அம்ஜத், இமாம்கஞ்ச் தொகுதியில் ஜிதேந்திர பஸ்வான், ராம்கர் தொகுதியில் சுஷில் குமார் சிங் குஷ்வாஹா, தராரி தொகுதியில் கிரண் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
+ There are no comments
Add yours