லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 10.45 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின்போது பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார், மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15, 2024) இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Neonatal Intensive Care Unit (NICU)-ன் வெளிப் பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.
NICU-ன் வெளிப்புறப் பிரிவில் குறைவான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மிகவும் முக்கியமான நோயாளிகள் உள் பகுதியில் வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
நள்ளிரவில் மருத்துவமனைக்கு வந்த ஜான்சி பிரதேச ஆணையர் பிமல் குமார் துபே, NICU-ன் உட்புறப் பிரிவில் சுமார் 30 குழந்தைகள் இருந்த நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
ஜான்சி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) சுதா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, காயமடைந்த 16 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைத்து மருத்துவர்களும், போதிய மருத்துவ வசதிகளுடன் உள்ளனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், அதற்கான காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 10 குழந்தைகள் இறந்தபோதும், மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். NICU-ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
NICU வில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தற்போதைய நிலையை சரிபார்க்க போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் போது 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது. அவர்களில் 10 பேர் இறந்துவிட்டனர், 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மற்றவர்களின் நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. NICU-வில் மீட்புப் பணிகள் நள்ளிரவு 1 மணியளவில் முடிந்துவிட்டன என தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் என்ஐசியூவில் நடந்த விபத்தில் குழந்தைகள் இறந்தது மிகவும் வருத்தமாகவும், மனவேதனையாகவும் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்ட ஆணையர் பிமல் குமார் துபே மற்றும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஜான்சி காவல் எல்லை) கலாநிதி நைதானி ஆகியோருக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அரசு நடத்தும் இந்த மருத்துவக் கல்லூரி 1968ல் தனது சேவைகளைத் தொடங்கியது. உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக இது உள்ளது.
+ There are no comments
Add yours