இலவச மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக உயா்வு? பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு.

Spread the love

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயனடைவோா் எண்ணிக்கை மற்றும் காப்பீட்டுத் தொகையை இரு மடங்காக உயா்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இது தொடா்பான அறிவிப்பு வரும் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. தற்போது இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.

இதை ரூ.10 லட்சமாக உயா்த்தவும், பயனாளிகள் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, 70 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த முடிவுகளை படிப்படியாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் வட்டாரங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன.

முன்னதாக, 2024 இடைக்கால பட்ஜெட்டில் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்தது. இதன் மூலம் ஒதுக்கீட்டுத் தொகை ரூ.646 கோடியில் இருந்து ரூ.7,200 கோடி வரை உயா்ந்தது. மொத்தம் 12 கோடி குடும்பங்களுக்கு இந்த மருத்துவக் காப்பீட்டை மத்திய அரசு அளித்துள்ளது.

கடந்த ஜூன் 27-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சோ்க்கப்படுவாா்கள் என்று அறிவித்தாா். இதன் மூலம் 5 கோடி புதிய பயனாளா்கள் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours