குஜராத்தில் கனமழை- உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

Spread the love

காந்திநகர்: குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநில முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்தில் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வருக்கு அவர் அறிவுறுத்தினார்.

குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு: கடந்த திங்கள்கிழமை 7 பேர் உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று அதிகபட்சமாக 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 17,800 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வதோதராவில் ஆகஸ்ட் 28 வரை 12,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜாம்நகரில் உள்ள முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது. அதோடு பலத்த மழைக்கு மத்தியில் பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.

குஜராத் அரசின் கோரிக்கையை அடுத்து, ராணுவத்தினர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்டிஆர்எஃப்) 95 பேரை மீட்டனர்.

ரெட் அலர்ட்: கட்ச் மாவட்டத்தில் உள்ளவர்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கட்ச் பகுதியில் மிக அதிக மழை பெய்து வருவதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள பன்வாட் நகரத்தில் 24 மணி நேரத்தில் 295 மிமீ மழை பதிவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநில முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு நிலைமையை ஆய்வு செய்தார். நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வருக்கு அறிவுறுத்தினார்.

இதனிடையே, குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக வீட்டுக்குள் புகுந்த முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக 5-க்கும் மேற்பட்ட முதலைகளை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் விட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். .

நாளையும் ஒரு சில இடங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நாளை (ஆக.30) குஜராத்தின் கரையோரத்தில் சூறாவளி புயல் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கிழக்கு ராஜஸ்தானில் இருந்து சவுராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

விவரம் கேட்டறிந்த மோடி: முதல்வர் பூபேந்திர படேல் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மூன்று நாட்களாக குஜராத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மீண்டும் ஒருமுறை என்னுடன் தொலைபேசியில் உரையாடி நிலைமையை அறிந்து கொண்டார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் அறிந்துகொண்டார்.

வதோதராவில் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கவலை தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் உதவிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, மத்திய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்கும் என்று மீண்டும் உறுதியளித்தார்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours