காஷ்மீரில் தொடரும் தாக்குதல் சம்பவங்கள்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை !

Spread the love

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவது குறித்து மாநில துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி மற்றும் உயர்அதிகாரிகளுடன் மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

காஷ்மீரியின் ரியாசி மாவட்டத்தில் சிவ்கோரி கோயிலுக்கு பேருந்தில் சென்ற பக்தர்களை குறிவைத்துதீவிரவாதிகள் கடந்த 9-ம் தேதிதாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

காஷ்மீரின் கதுவா பகுதி ஹிராநகரில் கடந்த 11-ம் தேதி புகுந்த 2 தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த நாள் மற்றொரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதே நாளில், காஷ்மீரின் தோடா பகுதியில் பாதுகாப்பு படையினரின் சோதனை சாவடியை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

கடந்த 12-ம் தேதி காஷ்மீரின்தோடா பகுதி காண்டோ வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு காவலர் காயமடைந்தார்.

காஷ்மீரில் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் கடந்த 13-ம் தேதி உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, காஷ்மீர்தாக்குதல்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில், மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே,புதிய ராணுவ தளபதியாக பதவியேற்க உள்ள உபேந்திர திவேதி, உள்துறை மூத்த அதிகாரிகள், காஷ்மீர் காவல் துறை அதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி உள்ளது. குறிப்பாக, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளன. தீவிரவாதம் மூலம் இந்தியா மீது மறைமுகமாக போர் தொடுக்கப்படுகிறது. இந்த போரை முழுமையாக முறியடிப்போம். காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும்.

காஷ்மீரில் மக்களவை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுத்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி, காஷ்மீர் வருவதாலும், அமர்நாத் புனித யாத்திரை தொடங்க உள்ளதாலும், காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டார். இதுகுறித்து பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க எல்லையில் ரோந்து பணி அதிகரிக்கப்படும்.

பிரதமர் மோடி 20-ம் தேதி ஸ்ரீநகர்செல்கிறார். மறுநாள் 21-ம் தேதி உலக யோகா தினத்தை முன்னிட்டுபிரதமர் தலைமையில் நகர் தால் ஏரி பகுதியில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி, காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு மாநில காவல் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித் ஷாஉத்தரவிட்டுள்ளார். அதன்படி, யோகா தின நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நகர் முழுவதும் இப்போதே பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு 4.28 லட்சம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட்டனர். இந்த ஆண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூடுதல் படைகளை குவித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புனித யாத்திரை வழித்தடங்களில் சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், ஐடிபிபி,பிஎஸ்எஃப் படைகளின் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும். இதன்மூலம் அவர்களது இருப்பிடத்தை துல்லியமாக அறியலாம். அசம்பாவிதம் நேரிட்டால் பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்து செல்ல முடியும். அடிவார முகாம் முதல் பனிலிங்க குகை வரை500 கம்பெனி படைகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு பாதுகாப்பு துறைவட்டாரங்கள் தெரிவித்தன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours