சனாதனத்தை ஒழிப்பதே “இந்தியா” கூட்டணியின் நோக்கமாக உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி..
“ஜி20 மாநாட்டை இந்தியா எப்படி வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது என்பது நம் அனைவரும் பார்த்திருப்போம். இது நமது நாட்டின் ஒற்றுமைக்கு சான்றாகும்.
ஜி20 பிரதிநிதிகள் நம் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைப் பார்த்து கவரப்பட்டனர். ஜி20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை நம் நாட்டு மக்களையே சேரும். ஜி20 மாநாட்டின் வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களின் வெற்றி.
இந்த “இந்தியா” கூட்டணியினர் சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த ‘சனாதன தர்மத்தை’ அழிக்க விரும்புகிறார்கள்.
இதற்காக இன்று வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைக்க ஆரம்பித்து விட்ட இவர்கள் நாளை நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள். எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து ‘சனாதனிகளும்’, நம் நாட்டை நேசிக்கும் குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சனாதன எதிர்ப்பாளர்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். ‘இந்தியா’ கூட்டணிக்கு என்று ஒரு தலைவர் இல்லை. அதிலும், இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்களாக உள்ளனர்.
இந்த ‘இந்தியா’ கூட்டணியானது இந்திய கலாச்சாரத்தை தாக்க மறைமுக செயல்திட்டத்துடன் வந்துள்ளது.
சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாச்சாரம் மீதான தாக்குதல். யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே தான் செல்லும்” என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours