வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பிற்கு ‘இந்தியா என பெயர் வைத்து செயல் பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு இந்தியா என இந்திய நாட்டின் பெயர் வரும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா என்ற பெயரை ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருகிறது என்றே கூறலாம். தற்போது இந்தியா எனும் பெயருக்கு பதில் பாரத் எனும் பெயரை குறிப்பிட வேண்டும் என்ற குரல் பாஜக ஆதரவாளர்களின் ஒருமித்த குரலாக மாறி வருகிறது.
ஏற்கனவே ஜி-20 மாநாடு அழைப்பிதழில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அழைப்பிதழில் குடியரசு தலைவரை குறிப்பிடுகையில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என பதிவிட்டு அழைப்பு கொடுத்துள்ளனர். இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் தங்களது கண்டனங்களை பதிவு செய்து இருந்தது.
அதற்குள் தற்போது அடுத்ததாக மீண்டும் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இன்று இரவு ஏசியன் கூட்டமைப்பில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு செய்தி நேற்று வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தி குறிப்பில் இந்திய பிரதமர் என்பதற்கு பதிலாக வழக்கத்துக்கு மாறாக பாரத பிரதமர் நரேந்திர மோடி என குறிப்பிட்டு அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது மீண்டும் இந்தியா பெயர் மாற்ற சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இரவு இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவிற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு ஏசியன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதன் பிறகு நாளை அங்கிருந்து நாடு திரும்ப உள்ளார். ஏசியன் (ASEAN) அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனை, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியோ ஆகிய 10 நாடுகள் உள்ளன.
+ There are no comments
Add yours