அதானி முறைகேட்டில் தொடர்பா? பிரதமர் விளக்க வேண்டும் – ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

Spread the love

இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 60 தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மும்பை சென்றுள்ளார். அப்போது, INDIA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதானி குழும முறைகேடுகள் குறித்து புதிதாக வந்துள்ள செய்திகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி கூறியதாவது, சர்வதேச பத்திரிகைகள் இன்று ஒரு முக்கிய பிரச்னையை மையப்படுத்தி எழுதியிருக்கின்றன. பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் குழும ஊழல்கள் பற்றி சர்வதேச நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. இந்த செய்தி இந்தியாவுக்கு வரும் முதலீடுகளை பாதிக்கக்கூடிய ஒன்று. பிரதமருக்கும், அதானிக்கும் இருக்கும் தொடர்பை 2 பிரபல பத்திரிகைகள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவின் சொத்துக்களை வாங்க அதானிக்கு எப்படி பணம் வருகிறது?, அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது?, இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதை அனுமதித்தது யார்?, அதானி விவகாரத்தில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன்?, அதானி மீதான குற்றசாட்டுகளை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? என பல கேள்விகளை எழுப்பினார்.

அதானி குழுமத்தின் முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு சாதகமாக உள்ளது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி நாட்டில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை வெளிக்காட்டியுள்ளது. நாட்டில் பொருளாதாரம் மற்றும் வணிகம் உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அதானியால் இந்தியாவில் உள்ள எதையும் எளிதாக வாங்க முடியும், இது எப்படி? என்றுள்ளார்.

மேலும், அதானியின் பணம் யாருடையது என்பதை பிரதமர் விளக்க வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி பிரதமரின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது என அதானி குழுமம் முறைகேடு செய்ததாக சர்வதேச பத்திரிகையில் வெளிவந்த அறிக்கையின் அடிப்டையில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

மேலும் ராகுல் பேசுகையில், இந்திய தொழில் நிறுவனங்கள் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது. ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் மட்டும் ஏன் இலவச சவாரி செய்கிறது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் அதானி முறையீடு குறித்து கேள்வி எழுப்புவேன் என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours