தென் மாநிலங்களின் உதவியால் மோடி மூன்றாவது முறை அரியணை ஏறுகிறாரா ? – ஆச்சரியமூட்டும் கருத்துகணிப்புகள்

Spread the love

பிரதமர் மோடியின் ஹாட் ட்ரிக் வெற்றிக்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலான தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்திருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த சூட்டோடு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை உறுதி செய்துள்ளன. இந்தியாவின் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு தனித்து 370 இடங்கள் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 என பாஜக தலைவர்களின் எதிர்பார்ப்பினை இந்த கருத்துக்கணிப்புகள் பூர்த்தி செய்துள்ளன.

கருத்துக்கணிப்புகள் என்பவை தேர்தல் முடிவுகளோடு துல்லியமாக பொருந்துவதில்லை என்றபோதும், இன்று மாலை வெளியான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மத்தியில் பொதுவான ஒப்புமைகள் தென்படுகின்றன. பாஜகவுக்கு பெரும்பான்மை என்பதோடு, மேற்கிலும் கிழக்கிலும் பாஜகவுக்கு கணிசமான ஆதரவு கிடைத்திருப்பதை அவை உறுதி செய்துள்ளன. அதிலும் பாஜகவுக்கு போதுமான வாய்ப்பில்லை என கருதப்படும் தென் மாநிலங்களில் அக்கட்சிக்கு ஆச்சரியமூட்டும் ஆதரவான சூழல் தலைகாட்டி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு தயவில் கூட்டணியாக தேஜகூ, மொத்தமுள்ள 25 இடங்களில் சுமார் 18 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. அங்கே சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்தே நடப்பதால், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் பாஜகவுக்கு சாதகம் செய்துள்ளன. கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்துள்ளபோதும், மக்களவைத் தேர்தலில் பாஜக பக்கமே காற்று வீசுகிறது. தென் மாநிலங்களில் பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஒரே மாநிலமான கர்நாடகம் பாஜக எதிர்பார்ப்பை இந்த தேர்தலிலும் காப்பாற்றுகிறது.

கர்நாடகத்தில் மட்டுமன்றி காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும் இன்னொரு தென் மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக, பாஜகவே அதிக இடங்களை சூட வாய்ப்புள்ளதாக கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவின் 17 தொகுதிகளில் பாதிக்கும் மேலாக பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தாமரை மலரவே மலராது எனப்பட்ட தமிழ்நாடு மற்றும் கேரளத்திலும், பாஜக பூஜ்ஜியம் பெறுவது இம்முறை தடுக்கப்படும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தில் 2 இடங்கள் வரையிலும், கேரளத்தில் ஒரு இடமாகவும் வெற்றி வாய்ப்புக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தென் மாநிலங்களுக்கு அப்பால், கிழக்கிலுள்ள மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களும் நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சகாயம் சேர்த்துள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours