ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்த இமாலய சாதனை, நலத்திட்டங்களின் மானியத்தொகை நாட்டின் அனைத்து மூலைமுடுக்கிலும் வசிக்கும் மக்களை சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்திருப்பதை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பெண்களால் தொடங்கப்பட்டவை என்பது வியப்பளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டி சாதனை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு இருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், நலத்திட்டங்களின் மானியத் தொகையை பயனாளிகளுக்கு வங்கி மூலம் நேரடியாக செலுத்துவதற்கு உதவும் வகையிலும், பிரதமரின் ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பாமர மக்களுக்கும் வங்கி கணக்கு வசதியை அளிக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.
அவ்வாறு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கை, தற்போது 50 கோடியை தாண்டியிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 56 சதவீத கணக்குகள் பெண்களுடையதாக இருப்பதாகவும், 67 சதவீத வங்கி கணக்குகள் ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வங்கி கணக்குகளில் இரண்டு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை டெப்பாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours