காவிரி படுகை அணைகளில் நீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை நிறுத்தியுள்ளோம் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “தமிழ்நாட்டிற்கு அவர்களின் எதிர்பார்ப்புபடி காவிரி நீரை திறக்க முடியவில்லை. மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகளின் நலன் குறித்து விவாதித்தோம். அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. மழையை எதிர்நோக்கியுள்ளோம். பெங்களூரு, ராமநகர் பகுதியில் மழை பெய்து வருகிறது. ஆனால் தேவையான அளவுக்கு மழை பெய்யவில்லை.
காவிரி படுகையில் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி பிலிகுண்டுலுவுக்கு நீர் செல்லவில்லை. எங்களால் நீரை வழங்க முடியவில்லை. அதனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின் நிலை குறித்து எடுத்துக்கூற முயற்சி செய்து வருகிறோம். நமது விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை குறித்து புரிந்துள்ளது.
நாங்கள் தொடக்கத்திலேயே இதுகுறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தோம். விவசாயிகளுக்கு பயிரிடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆனால் தமிழ்நாடு இதுபோன்ற எச்சரிக்கையை பின்பற்றவில்லை. அவர்கள் இருக்கும் நீரில் சாகுபடி செய்துள்ளனர். வறட்சி, நீர்வரத்து இல்லாத காரணத்தால் உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளோம். காவிரி படுகை அணைகளில் நீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை நிறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.
காவிரியில் நீர் திறப்பதை நிறுத்தி விட்டதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ள நிலையில், சாகுபடி செய்துள்ள நெற்பயிரை எப்படி காற்றுவது என்று கலக்கத்தில் உள்ளனர் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள்.
+ There are no comments
Add yours