புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று (செப். 29) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே (83) கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உதவிக்கு ஓடினர். தண்ணீர் குடித்ததும் இயல்பு நிலைக்கு திரும்பிய கார்கே மேடையில் தனது பேச்சை தொடர்ந்தார். அப்போது கார்கே கூறுகையில், “காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க நாம் போராடுவோம். எனக்கு 83 வயது ஆகிறது. நான் விரைவில் இறக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிரோடு இருப்பேன்.” என தெரிவித்தார்.
பொது மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பிரதமர் நரேந்திர மோடி, மல்லிகார்ஜுன கார்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று நலம் விசாரித்தார்.
அதேநேரத்தில், கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (செப். 30) பதிலளித்தார். அவர் தனது பதிவில், “காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நேற்றைய பேச்சு, முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருந்தது. இவ்விஷயத்தில் அவர், தனது கட்சித் தலைவர்களையும், கட்சியையும் விட விஞ்சிவிட்டார்.
பிரதமர் மோடி மீது காங்கிரஸுக்கு எவ்வளவு வெறுப்பும் அச்சமும் இருக்கிறது என்பதையும், அவர்கள் எவ்வாறு பிரதமர் மோடி குறித்தே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது. ” என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours