உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன்படி மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பில் சேரும்போது, G21 என மறுபெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க யூனியன் (AU) 55 நாடுகளை உள்ளடக்கியது. அதனை G20-ல் அது சேர்ப்பதினால் இரண்டாவது பெரிய குழுவாக மாறும்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டிற்கான கூட்டறிக்கைக்கு ஜி20 உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அந்த கூட்டறிக்கையை வெளியிட ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த கூட்டறிக்கை குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய தூதரக அதிகாரிகள் இணைந்து பல்வேறு நாடுகளின் தூதர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் ஜி20 கூட்டறிக்கை ஆனது ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடிஅறிவித்துள்ளார். இந்த அறிக்கையின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கூறிய பிரதமர் மோடி, “எனக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எங்கள் குழுவின் கடின உழைப்பின் காரணமாக, புது தில்லி ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் பிரகடனத்தில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கிறேன். இதற்காக கடுமையாக உழைத்து, அதைச் சாத்தியப்படுத்திய எனது ஷெர்பா, அமைச்சர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்தி, நன்றி தெரிவிக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours