ஜி 20 மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்ய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்பதில்லை என்பது உறுதியான சூழலில், எதிர்பார்ப்புக்குரிய அமெரிக்க அதிபரின் வருகையிலும் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுக்கு பதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்பார் என அந்நாடு அறிவித்திருந்தது. இதே போன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் பதிலாக அந்நாட்டின் பிரதமர் பங்கேற்பார் என சீனா நேற்று அறிவித்திருந்தது.
ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போர் விவகாரமும் முக்கிய விவாதப் பொருளாகும் என்பதால், சங்கடங்களைத் தவிர்க்க ரஷ்ய அதிபர் புதின் தனது இந்திய வருகையை ரத்து செய்துள்ளார். அதே போன்று கடந்த வாரம் சீனா வெளியிட்ட அதன் தரநிலை தேச வரைபடத்தில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டது தொடர்பாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சூழலில் சீன அதிபரும் தனது இந்திய வருகையை தவிர்த்துள்ளார்.
இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகையிலும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று, நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக லேசான அறிகுறிகள் மட்டுமே அவரிடம் தென்பட்ட போதும், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
உடனடியாக அதிபர் ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ’நெகட்டிவ்’ என்றே தெரிய வந்தது. எனினும், ஜோ பைடனுக்கு அடுத்து வரும் நாட்களிலும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாலும், உலகத் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-20 மாநாட்டில் அவர்களை நேரடியாக சந்தித்து அளவளாவுவதன் நடைமுறை சிக்கல்கள் காரணமாகவும், பைடனின் இந்தியப் பயணத்தில் புதிய தடங்கல் எழுந்துள்ளது.
+ There are no comments
Add yours