கேரளாவில் நிஃபா வைரசால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழ்நாடு – கேரளா எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல் முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்றும் நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் பரவுகிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமயத்தில், கடந்த 2018ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அப்போது, கேரளாவில் நிபா வைரசால் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு கொச்சியிலும், கடந்த 2021-ம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
இந்த சூழலில் கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் ஒருவர் (வயது 49), மர்ம காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி மற்றொரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தனர். அதாவது, மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இறந்த நபருடன் தொடரில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்களின் மாதிரிகள் மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் இருவரும் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. இதில் குறிப்பாக, இரண்டாவதாக இறந்த நபரின் மனைவி, 9 வயது, 4 வயது முறையேயான 2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேரளா மாநிலம் கோழிக்கோட்டை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நிபா வைரஸ் அறிகுறி உள்ள நபரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டையில் நிபா வைரசால் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, மேலும் ஒருவருக்கு வைரஸ் அறிகுறி கண்டறிப்பட்டுள்ளது.
எனவே, நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேனி, நீலகிரி, திருப்பூர், கோவை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours