இனிமேல் பாஜகவுக்கு எப்போதும் ஆதரவு இல்லை என அறிவித்துள்ள பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக், வலிமையான எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் இயங்குவோம் எனவும் அறிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், இன்று தனது கட்சியின் ஒன்பது ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர், ஜூன் 27-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரில், துடிப்பான மற்றும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுமாறு எம்.பிக்களை கேட்டுக் கொண்டார். மேலும், மாநிலத்தின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளை அழுத்தமான முறையில் எழுப்புமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஜேடியின் ராஜ்யசபா தலைவர் சஸ்மித் பத்ரா, “இந்த முறை பிஜேடி எம்.பி-க்கள் ராஜ்யசபாவில் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்துவது உறுதி. ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை எழுப்புவதோடு, மாநிலத்தின் மோசமான மொபைல் நெட்வொர்க் மற்றும் மாநிலத்தில் உள்ள குறைவான வங்கிக் கிளைகள் ஆகிய பிரச்சினைகளையும் எழுப்புவார்கள்.
நிலக்கரி ராயல்டியை திருத்த வேண்டும் என்ற ஒடிசாவின் கோரிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தங்களின் உரிமையான பங்கை இழந்த மாநில மக்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
ராஜ்யசபாவில் உள்ள ஒன்பது எம்.பி.க்களும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவார்கள். நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு பட்நாயக் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்” என்று அவர் கூறினார்
பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரச்சினை அடிப்படையிலான ஆதரவை வழங்கிய பிஜேடியின் முந்தைய நிலைப்பாடு தொடருமா என்ற கேள்விக்கு, “இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை, எதிர்க்கட்சி மட்டுமே. ஒடிசாவின் நலன்களைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம். பாஜகவை ஆதரிப்பது என்ற கேள்விக்கு இடமில்லை” என்றார்.
ராஜ்யசபாவில் பிஜேடிக்கு ஒன்பது எம்.பி.க்கள் உள்ளனர். அதே சமயம் 1997ல் கட்சி உருவான பிறகு முதல் முறையாக, சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் ஒரு இடத்தை கூட வெல்ல முடியவில்லை. அதேபோல 24 ஆண்டுகாலமாக ஆட்சி செய்துவந்த நவீன் பட்நாயக்கையும் வீழ்த்தி, ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
பிஜேடி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் பாஜகவை ஆதரித்தது. அது மட்டுமல்லாமல் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கவும் பிஜேடி உதவியது.
முன்னதாக நவீன் பட்நாயக், “ஒடிசா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விட பாஜக நான்கு இடங்களை மட்டுமே அதிகம் பெற்றுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மத்தியிலும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. எனவே, கடினமாக உழைத்து, ஒற்றுமையாக இருந்து, கட்சியை பலப்படுத்த வேண்டும்” என்று தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார்.
+ There are no comments
Add yours