ஜி20 மாநாட்டையொட்டி டெல்லி சாலைகளில் 6.75 லட்சம் தொட்டிகளில் பூச்செடிகள் !

Spread the love

ஜி20 மாநாட்டையொட்டி டெல்லி சாலைகளில் 6.75 லட்சம் தொட்டிகளில் பூச்செடிகள் வைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக டெல்லி பிரகதி மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அத்துடன் டெல்லி முழுவதையும் அழகுபடுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்த ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லி துணைநிலை கவர்னர் சக்சேனா தலைமையில் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. அதன்படி, டெல்லி நகர் முழுவதும் உள்ள 61 சாலைகள் மற்றும், முக்கிய பகுதிகளில் 6.75 லட்சம் தொட்டிகளில் பூச்செடிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இதில் முக்கியமாக சர்தார் படேல் மார்க், அன்னை தெரசா கிரசன்ட், திருமூர்த்தி மார்க், விமான நிலையம் சாலை, பாலம் தொழில்நுட்ப பகுதி, இந்தியாகேட், அக்பர் ரோடு ரவுண்டானா, ராஜ்காட் உள்ளிட்ட இடங்கள் அனைத்தும் பூச்செடிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.

இதற்காக செடிகள் மற்றும் தொட்டிகள் வாங்குவதற்காக 5 துறைகள் மற்றும் நிறுவனங்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மேலும் வனத்துறை மற்றும் டெல்லி பூங்கா மற்றும் தோட்ட சமூகமும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் 4.05 லட்சம் செடிகள் ஏற்கனவே சாலைகளில் வைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள செடிகள் அடுத்த வாரம் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் மாநாடு நாட்களில் அவை பூத்து குலுங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மாநாட்டையொட்டி டெல்லி நகர வீதிகள் அனைத்தும் துய்மைப்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றன. குறிப்பாக சாலையோர சுவர்களில் ஓவியங்கள் வரைந்தும், கல் சிற்பங்களை செதுக்கியும் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours