பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும்: ராஜ்நாத் சிங் அழைப்பு

Spread the love

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தார். மேலும் அவர், “பாகிஸ்தானைப் போல் இல்லாமல், நாங்கள் உங்களை எங்களின் சொந்தங்களாக கருதுகிறோம். அவர்கள் உங்களை வெளிநாட்டினர் போல நடத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் தொகுதியில் நடந்த பாஜகவின் தேர்தல் பேரணியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் அடுத்த அரசு அமைக்க பாஜகவுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதன் மூலமாக இந்தப் பிராந்தியத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை நாங்கள் மேற்கொள்ள முடியும். எந்த அளவுக்கு என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்கள் நாங்கள் பாகிஸ்தானுடன் இருக்க விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவுடன் செல்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு அந்த வளர்ச்சி இருக்கும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பாகிஸ்தானின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமீபத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை வெளிநாடு என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உங்களை வெளிநாட்டினராக கருதுகிறது. ஆனால் இந்தியா உங்களை அப்படி நினைக்கவில்லை. நாங்கள் உங்களை எங்களின் சொந்தங்களாகக் கருதுகிறோம். அதனால் நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டுவருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக இருக்கும் வரை அது நடக்காது. சட்டப்பிரிவு 370 நீக்கத்தால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். நாங்கள் அதை தைரியமாக செய்தோம். அதனால் எதுவும் நடந்துவிடவில்லை” இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீருக்கு சென்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் ராகேஷ் சிங் தாகூரை ஆதரித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தார்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்.18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் அக்.8-ம் தேதி எண்ணப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் தனித்தொகுதிகளாக 7 பட்டியல் பிரிவினருக்கான தொகுதிகள், 9 பழங்குடியினருக்கான தொகுதிகள் உள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours