மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள்- கார்கே

Spread the love

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டத்தை விட நாட்டில் மிகப் பெரிய பிரச்சினை எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தோற்கடிப்பார்கள் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “வேலையில்லா திண்டாட்டத்தை விட மிகப் பெரிய பிரச்சினை நாட்டில் இல்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததில் மோடிக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. பிஎல்எஃப்எஸ் (Periodic Labour Force Survey) -ன் சமீபத்திய தரவுகளை நாம் உன்னிப்பாக கவனித்தால் எவ்வளவு முயன்றும் அரசின் இந்தத் தரவுகளால் இளைஞர்களின் இயலாமை நிலையை மறைக்க முடியவில்லை என்பது புரியும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் கார்கே கீழ்கண்ட கேள்விகளுக்கு நரேந்திர மோடி கட்டயாம் பதிலளிக்க வேண்டும் என்று கூறி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவை: “2023-24 ஆண்டில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் 10.2 சதவீதமாக இருக்கிறதா இல்லையா? வண்ணமயான முழக்கங்களை வழங்கி புகைப்படம் எடுத்ததைத் தவிர இளைஞர்களுக்கு வேலை வழங்க மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்?

கடந்த ஏழு ஆண்டுகளில் தொடர்ச்சியாக சம்பளம் பெறும் பெண்களின் எண்ணிக்கை 15.9 சதவீதமாக குறைந்துள்ளது என்பது உண்மையா, இல்லையா? கிராமபுறங்களில் ஊதியமில்லாத பணிகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 51.9 சதவீதத்தில் (2017-18) இருந்து 67.4 சதவீதமாக (2023-24) அதிகரித்து உள்ளதா, இல்லையா? உற்பத்தித் துறையைப் பற்றி அதிகம் பேசும் மோடி அரசு, கடந்த ஏழு ஆண்டுகளாக அந்தத் துறையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லையே? கடந்த 2017-18 ஆண்டில் 15.85 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டில் 11.4 சதவீதமாக சரிந்தது ஏன்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், “இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மோடி ஜி, உங்கள் அரசால் வேலைவாய்ப்பை இழந்த ஒவ்வொரு இந்திய இளைஞனும் ஒன்றைச் செய்வார்கள். அது ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தோற்கடிப்பதே” என கார்கே தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours