விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளிவந்து ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளது. வெற்றிகரமாக நேற்று தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர், நிலவின் தென்துருவத்தில் ஊர்ந்து சென்றது.
இதனை இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் தமது ஆய்வுப் பணிகளை தொடங்கியது. ரோவரின் 6 சக்கரங்கள் நிலவின் தரைப்பகுதியில் இந்திய மூவர்ண கொடி மற்றும் இஸ்ரோவின் இலச்சினையை பதித்துள்ளது.
நிலவில் தனிமங்களையும், தாதுக்களையும் கண்டறியும் வகையில் ரோவர் ஆய்வு செய்யவுள்ளது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.
இதனிடையே நிலவின் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய வீடியோ பதிவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திராயன் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தியாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் கால்பதித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றிக்கு இணைந்து பணியாற்றிய அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதோடு, நம்பமுடியாத சாதனையை நிகழ்த்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியில் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ள துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்த திட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து விரிவான விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருவது பெருமை மிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமிரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சந்திராயன் – 3 விண்கலத்தின் வெற்றி குறிப்பிடத்தக்க அறிவியல் சாதனை என குறிப்பிட்டுள்ளார். இந்திய வரலாற்றில், மனித குல சேவைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாகவும் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours