தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ஆசியா நாடுகள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆசியான் அமைப்பின் 43-வது உச்சி மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு, ஜகார்த்தாவில் இன்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகையில், “தெற்கு- கிழக்கு ஆசியா- இந்தியா – மேற்கு ஆசியா – ஐரோப்பாவை இணைக்கும் வகையில் பொருளாதார வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவின் பொது சேவை டிஜிட்டல் உள் கட்டமைப்புகளை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.
எதிர்கால டிஜிட்டல் திட்டங்களுக்காக ஆசியான்- இந்தியா நிதியம் ஏற்படுத்தப்படும். ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா அமைப்புகளின் பொருளாதார, ஆராய்ச்சி மையங்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். சர்வதேச அரங்குகளில் தெற்கு நாடுகளின் குரல் ஒருமித்து ஒலிக்க வேண்டும். அதற்கு ஆசியான் உறுதுணையாக இருக்க வேண்டும். தெற்கு நாடுகளின் பிரச்சினைகளை எழுப்புவதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவில் செயல்படும் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ மையத்தோடு ஆசியான் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியாவின் லைப் இயக்கத்துடன் ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்கள் மருந்தகம் திட்டத்தின் வெற்றி அனுபவங்களை ஆசியான் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான போர், தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுப்பது, இணையவழி தாக்குதலை எதிர்கொள்வதில் ஒருமித்து செயல்பட வேண்டும். பேரிடர் தடுப்பு தொடர்பான இந்தியாவின் சிடிஆர்ஐ அமைப்புடன் ஆசியான் நாடுகள் இணைய வேண்டும்.
பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த 12 அம்சங்களையும் நிறைவேற்ற ஆசியான் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய 21-ம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டாக அமையும். இந்த நூற்றாண்டில் ஆசிய நாடுகள் கோலோச்சும்” என்றார்.
+ There are no comments
Add yours