மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த ரெயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 35-40 தொழிலாளர்கள் இருந்ததால், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, இடிந்து விழுந்த ரெயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் இன்னும் பலரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், மிசோரம் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடியும் அம்மாநில முதல்-மந்திரியும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours