திருப்பத்தூர் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிட பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 8-9-2023 அன்று வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11-9-2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது ஏற்பட்டது.
இதனால், தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில்,பேருந்திற்குள் இருந்த செல்வி (எ) சேட்டம்மாள், க/பெ.பழனி (வயது 55), மீரா, க/பெ.முனுசாமி (வயது 51), தேவகி, க/பெ.சண்முகம் (வயது 50), கலாவதி, க/பெ.குப்புசாமி (வயது 50), சாவித்ரி, க/பெ.குப்பன் (வயது 42), கீதாஞ்சலி, க/பெ.ரஞ்சித் (வயது 35) மற்றும் தெய்வானை, க/பெ.திலிப்குமார் (வயது 32) ஆகிய ஏழுபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில்,
“தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உதவித் தொகையாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
+ There are no comments
Add yours