கேரளாவில் மீண்டும் பரவுகிறது… நிபா வைரஸ்!

Spread the love

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சலால் சமீபத்தில் உயிரிழந்த இருவருக்கு, நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தெரிவித்தார். மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில், தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. நிலைமையை ஆய்வு செய்யவும், தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுக்கு உதவவும் மத்திய நிபுணர்கள் குழு கேரளா விரைகிறது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018 மற்றும் 2021ல் நிபா வைரஸ் பரவல் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலம் முழுதும் அச்சம் பரவியது.

மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின், தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது.

காய்ச்சல்

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தின் மருதோன்கரா மற்றும் அயன்சேரி கிராமங்களைச் சேர்ந்த இருவர் காய்ச்சல் ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தனர்.

ஒருவர் தனியார் மருத்துவமனையிலும், மற்றொருவர் அரசு மருத்துவமனையிலும் உயிர்இழந்தார். நிபா வைரஸ் பரவல் மீண்டும் ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் மாநிலம் முழுதும் பரவியது.

இதையடுத்து, உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் நான்கு பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. உயிரிழந்த இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில், கோழிக்கோட்டில் நேற்று காலை உயர்மட்ட கூட்டம் நடத்தது. அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

கோழிக்கோடு மாவட்டம் முழுதும் உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் முக கவசம் அணியவும், தேவையின்றி மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வேறு யாரேனும் அவர்களுடன் தொடர்பில் இருந்தனரா என்பதை கண்டறியும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, அவசர உதவி எண்கள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 16 அதிகாரிகளின் தலைமையில், 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக ஆபத்து உள்ளோர், அறிகுறிகள் இல்லாதோர் தனித்தனியாக பட்டியலிடப் பட்டுள்ளனர்.

அதிக ஆபத்து உள்ளோர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அறிகுறிகள் இல்லாதோர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று பரவல்

பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு சென்று வந்தனர் என்ற பட்டியலை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

மருதோன்கரா கிராமத்தில் உயிரிழந்தவரின் மனைவி, 9 மற்றும் 4 வயதான இரு குழந்தைகள், மைத்துனர் மற்றும் அவருடைய 10 மாத கைக்குழந்தை உள்ளிட்டோர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

ஐந்து பேரில் மூன்று பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளன. 9 வயதான குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மனைவிக்கு அறிகுறிகள் இல்லை, ஆனால், 10 மாத கைக்குழந்தைக்கு சாதாரண சளி இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

மருதோன்கரா மற்றும் அயன்சேரி கிராமங்களைச் சேர்ந்த, 90 குடும்பத்தினரிடம் அறிகுறிகளுக்கான ஆய்வை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து முடித்துள்ளனர்.

நிபா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நிலைமையை ஆய்வு செய்யவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணியிலும் மாநில அரசுக்கு உதவவும், மத்திய நிபுணர்கள் குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours