ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வழக்கமான பூஜைகளை காட்டிலும் சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருட பிறப்பு போன்றவற்றிற்கு திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.
கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை திறக்கப்படுகிறது.
திருவோண பூஜைக்காக மாலை 5 மணிக்கு மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி முன்னிலையில் அர்ச்சகர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைக்கிறார். சபரிமலை சன்னிதானத்தில் தீபத்திருவிழா முடிந்ததும், ஹோம குண்டத்தின் உச்சியில் உள்ள தீபம் ஏற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து சன்னதிக்கு செல்லும் 18 படிகளில் பக்தர்கள் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
ஓணம் பண்டிகையின் போது, வழக்கமான பூஜைகள் தவிர, உத்ராடம் முதல் சதயம் நட்சித்திர நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. உத்ராடம் நாளில் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி, திருவோணம் மற்றும் அவிட்டம் நாட்களில் தேவஸ்தான ஜீவன்க்காரர்களும் கலந்துகொள்வார்கள். சதயம் நட்சத்திரம் நாளில் ஒரு பக்தர் சடங்கு ஊர்வலத்தை வழிநடத்துவார். இந்த ஊர்வலம் ஓணசத்யா என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய ஓணம் விருந்தான ஓணசத்யா, உத்ராடம் முதல் சதயம் வரையிலான நாட்களில் பரிமாறப்படுவது வழக்கம். உத்ராடம் நாளில், மேல்சாந்தி கே. ஜெயராமன் நம்பூதிரி தலைமையில், காவல்துறையினர் பங்கேற்பார்கள். சதயம் நாளில் பக்தர் ஒருவரின் தலைமையில் ஓணம் விருந்துடன் தொடர்புடைய சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்வதற்காக முன்பதிவு நடைபெற்று வருகிறது.
+ There are no comments
Add yours