டெல்லி இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா? -சசி தரூர்

Spread the love

புதுடெல்லி: “டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என அங்கு நிலவும் காற்று மாசை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளிலும் இன்று காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் சுவாசப் பிரச்சினைகளோடு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரம் டெல்லி என்பது ஏற்கெனவே அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது. உலகின் இரண்டாவது மாசடைந்த தாக்கா நகரைவிட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. நமது அரசாங்கம் பல ஆண்டுகளாக இந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாதது. நானும் கடந்த 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்காக காற்றின் தர வட்ட அட்டவணையை நடத்தினேன், ஆனால் கடந்த ஆண்டு கைவிட்டேன், ஏனெனில் எதுவும் மாறவில்லை, யாரும் கவலைப்படவில்லை. இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ பிழைக்கலாம் என்பதுபோல் உள்ளது. இத்தகையச் சூழலில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று மாலை டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் சுகாதாரத் துறைக்கு பிறப்பித்த உத்தரவில், லோக் நாயக் மருத்துவமனையில் சிறப்பு செயற்குழு அமைத்து காற்று மாசு காரணமாக ஏற்படும் மருத்துவ அவசர நிலையை துரிதமாக திறம்பட எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள்: டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி டெல்லி அரசு ஏற்கெனவே 10 மற்றும் 12 -ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளை நடத்த தடைவிதித்துள்ளது. மேலும், அவர்களுக்கான வகுப்பு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில், “டெல்லியில் காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமையன்று இந்த சீசனில் மிகவும் மோசமான அளவாக 486-ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்காத டெல்லி அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக காற்றின் தரக் குறியீடு தீவிர பாதிப்பு நிலையில் தொடர்கிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைனில் பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் கிராப் 4 விதிமுறைகளை டெல்லி அரசு எந்த காரணத்தை கொண்டும் தளர்த்தக்கூடாது.” எனக் குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours