திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை கேரள திரையுலகில் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசினர். அந்த வகையில் மலையாள துணை நடிகை ஒருவர், மூத்த நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஹோட்டலில் வைத்து தன்னை சித்திக் பாலியல் வன்கொடுமை செய்தார் என சிறப்பு புலனாய்வு குழுவில் (SIT) புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து திருவனந்தபுரம் மியூசியம் காவல்துறையினர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நடிகர் சித்திக் முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சித்திக் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிரான சித்திக் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு இன்று (செப்.30) உச்ச நீதிமன்றத்தில் பேலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி திரிவேதி, “8 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டீருந்தீர்கள்? எது உங்களை 8 ஆண்டுகளாக புகார் அளிக்காமல் தடுத்தது?. இத்தனை நாட்கள் மவுனமாக இருந்ததற்கு நியாயமான பதிலை சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இதனை பரந்துப்பட்ட பார்வையில் (larger context) புரிந்துகொள்ள வேண்டுகிறேன். சித்திக் அதிகாரம் படைத்த அமைப்பின் செயலாளராக இருந்தவர். 2014-ல் சித்திக், என் மனுதாரரின் புகைப்படத்தை மிகவும் பிடித்துள்ளது என்று கூறி லைக் செய்திருந்தார். அப்போது என் மனுதாரருக்கு வயது 19” என்றார்.
தொடர்ந்து சித்திக் தரப்பு வழக்கறிஞர், “என் மனுதாரர் 67 வயதை கடந்தவர். 365 படங்களில் நடித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். அவரை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும்” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து அதுவரை சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours