துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி. 62 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக்கொண்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்தத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்த ‘வால் ஸ்ட்ரீட்’ (அமெரிக்க பங்குச்சந்தை) முதலீட்டாளர்களை அதானி குழுமம் ஏமாற்றி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தச் செய்தியை அடுத்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்தது.
இந்த நிலையில் அதானிக்கு அமெரிக்கா பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours