புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று கூறுகையில், ” இந்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை (நாடாளுமன்றத் தேவைகளுக்கு உட்பட்டு) நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் நவம்பர் 26-ம் தேதி, அரசியலமைப்பு தினத்தன்று சம்விதன் சதனின் மைய மண்டபத்தில் சிறப்புக் கொண்டாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்கு முந்தைய கூட்டத்தொடரில் கொடுத்த காலக்கெடுவை சரியான முறையில் கடைபிடிக்கும் பட்சத்தில், கூட்டுக்குழுவின் அறிக்கை நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் பத்தாண்டுகள் கழித்து ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத்தேர்தல் முடிந்து தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பின்பு நடக்க இருக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours