தொடர்ந்து கற்பதன் மூலம் வாய்ப்புகளை கைப்பற்றவும், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளவும் முடியும் என்று மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்.
கோவாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் இன்று கோவா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் பேருரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பட்டம்பெற்றவர்களில் 55 விழுக்காட்டினரும், தங்கப் பதக்கம் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினரும் பெண்கள் என்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். திறமையுடனும் நம்பிக்கையுடனும் பெண்கள் முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
பட்டமும் தங்கப் பதக்கமும் வேலை கிடைக்கவோ, தொழில் தொடங்கவோ உதவும் என்றும், அதேநேரத்தில் வாழ்வில் எந்த நேரத்திலும் துணிச்சலையும் ஊக்கத்தையும் இழந்துவிடக் கூடாது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
தேசியக் கல்விக்கொள்கையின்படி, தரமான கல்வியை வழங்குவதற்காக நமது கல்வியமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துவதாகவும், தொழில்சார்ந்ததாகவும், தொழில்சார்ந்த, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் இந்தக் கல்விக்கொள்கை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, கோவா ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பழங்குடியினத்தவர்களுடன் கலந்துரையாடினார்.
+ There are no comments
Add yours