63வது ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சியாம்) மாநாடு இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, “காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் “மாசு வரி” என்கிற பெயரில் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு 10% கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாடு குடிமக்களுக்கு உடல்நலக் கேடு விளைவிக்கும். இதனால், டீசல் மூலம் இயங்கும் வாகனங்ககளுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டியை விதிக்க முன்மொழியப்பட்ட கடிதத்தை இன்று மாலை நிதியமைச்சரிடம் வழங்க உள்ளேன் எனக் கூறினார்.
ஆனால் இப்பொழுது டீசல் கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு, மாசு வரியாக 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான பரிந்துரை இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கர்கரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை நிதின் கர்கரி அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், “டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு இல்லை என்பதை தெளிவுபடுத்துவது அவசியம்.”
“2070க்குள் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருட்கள் இறக்குமதி மாற்றுகளாகவும், செலவு குறைந்ததாகவும், சுதேசி மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours