புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடரான இன்று பிரதமர் மோடி உரையை தொடர்ந்து , புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவல் பணியாக மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
இதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று வரும் வேளையில், இந்த மசோதா குறித்து மாநிலங்களவையிலும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது. அதனால்தான் அரசியல் கட்சிகள் பலவீனமான பெண்களைத் தேர்ந்தெடுக்கும் பழக்கத்தை இதன் மூலம் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அவர்கள் (பாஜக) ஒருபோதும் படித்த மற்றும் வலிமைமிக்க பெண்களை தேர்ந்தெடுப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு, பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்கு இங்கே வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
இவரது கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் அனைத்து கட்சிகளும் வலிமையற்ற பெண்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் (கார்கே) கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
நாங்கள் அனைவரும் எங்கள் கட்சியால், நமது பிரதமரால் அதிகாரம் பெற்றுள்ளோம். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவிலேயே அதிகாரம் பெற்ற பெண் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறினார்.
+ There are no comments
Add yours