குஜராத், மராட்டியம், கோவா சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் அமித்ஷா தலைமையில் இன்று நடக்கிறது.
புதுடெல்லி, கடந்த 1957-ம் ஆண்டு, நாட்டில் 5 மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. இந்த கவுன்சில்களின் தலைவராக மத்திய உள்துறை மந்திரி செயல்படுகிறார். எந்த மாநிலத்தில் கூட்டம் நடக்கிறதோ, அதன் முதலமைச்சர், துணைத்தலைவராக இருப்பார். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 2 அமைச்சர்கள், இக்கவுன்சிலின் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்தியில் மோடி அரசு அமைந்த பிறகு, மண்டல கவுன்சில் கூட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள் தொடர்புடைய நீர்பகிர்வு, மின்சாரம், உள்கட்டமைப்பு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுவது வழக்கம். மேற்கு மண்டல கவுன்சிலில், குஜராத், மராட்டியம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான டாமன், டையு மற்றும் தாத்ரா, நகர் ஹவேலி ஆகியவை அடங்கி உள்ளன. மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம், இன்று (திங்கட்கிழமை) குஜராத் மாநிலம் காந்திநகரில் நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார்.
அதில், மேற்கண்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பாலியல் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிப்பது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு கோர்ட்டுகள் அமைக்கும் திட்டம் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, ஒவ்வொரு கிராமத்திலும் 5 கி.மீ. சுற்றளவுக்குள் வங்கிகள், இந்திய அஞ்சலக வங்கிகள் அமைத்தல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் பங்கேற்பது ஆகிய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours