திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் !

Spread the love

உத்தரப் பிரதேசத்தில் 35 ஆயிரம் ரூபாய் அரசு பணத்துக்கு ஆசைப்பட்டு, திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அம்மாநிலத்தில் முதல்வர் திருமண சட்டத்தின் கீழ் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசையாக பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி மொத்தமாக ஒரு ஜோடிக்கு 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அவற்றில் 35 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணமகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அந்த ஜோடிக்கு பரிசு பொருட்களாக 10 ஆயிரம் ரூபாய் பணமும், திருமண நிகழ்ச்சி செலவுக்காக 6 ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கப்படும்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஜான்சி நகரில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது குஷி என்ற மணமகளுக்கு, மத்திய பிரதேசத்தின் ரிஷ்வான் என்ற மணமகனுடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிச்சயத்தபடி திருமண நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் மணமகன் வந்து சேரவில்லை. இதனால் அரசின் பலன்கள் கிடைப்பதில் அந்த பெண்ணுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசின் பலன்களை பெறுவதற்காக உறவுக்கார இளைஞர் ஒருவரை குஷி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அரசு வழங்கிய பணப்பலன்கள், சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றையும் அவர் பெற்றுச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் இந்த மோசடி தற்போது வெளியே தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து மாவட்ட சமூக நல அதிகாரி லலிதா யாதவ் என்பவர் கூறும் போது, ”இந்த மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஜோடிகளின் ஆதார் அட்டைகள் சரியாக இருக்கின்றனவா என சரி பார்க்கப்படும். ஆனால் இந்த ஜோடி விவகாரத்தில் அது போன்ற நடைமுறைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குஷியின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ஆளும் அரசு மீது பல்வேறு மோசடி புகார்களை எதிர்க்கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த புதிய மோசடி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours