கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் கொடுத்த முக்கியமான வாக்குறுதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவி தொகை திட்டமாகும்.
இந்த திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா மைசூரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.08 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
இந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மாநில அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 2000 ரூபாய் வழங்கும் இந்த திட்டத்திற்கு கிரகலட்சுமி எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி துவக்கிவைத்தார். பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், ஒரு கட்டிடத்தின் வலிமை அதன் அஸ்திவாரத்தில் உள்ளது. அது போல பெண்கள் தான் இந்தியாவின் அஸ்திவாரம் என குறிப்பிட்டார்.
பெண்களின் அதிகாரத்தால் மட்டுமே நாடு வலிமை பெறும். கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட 5 உத்தரவாதங்களில் 4 பெண்களுக்காக உருவாக்கப்பட்டவை. கிரஹலக்ஷ்மி யோஜனா, திட்டம் மூலம் மாதத்திற்கு ரூ.2000 வங்கிக் கணக்குகளுக்கு வழங்கும், இது பெண்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பணப் பரிமாற்றத் திட்டமாகும். மேலும், பெண்களை மையப்படுத்திய இந்த கர்நாடக மாடல் இனி இந்தியா முழுவதும் செயல்படுத்தபடும் என அந்த டிவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தெரிவித்தார்.
+ There are no comments
Add yours