உலகக் கோப்பை கிரிக்கெட்: டிக்கெட் விற்பனை எப்போது? எப்படி பெறலாம்?

Spread the love


ஒருநாள் உலகக் கோப்பையின் திருத்தப்பட்ட அட்டவணையுடன், டிக்கெட் விற்பனைக்கான தேதியையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

செப்டம்பர் 3 ஆம் தேதி, அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்கப்படும். 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்காக நாட்டின் 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியின் தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன்படி, மொத்தம் 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையின் படி, கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அதே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

டிக்கெட் விற்பனை:

இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பையின் திருத்தப்பட்ட அட்டவணையுடன், டிக்கெட் விற்பனைக்கான தேதியையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது. இதன்படி, உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வருகிற 30ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை கிடைக்கும். நாக் அவுட் போட்டிகளுக்கான கடைசி டிக்கெட்டுகள் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் கிடைக்கும்.

டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும்?:

இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய www.cricketworldcup.com/register என்ற பக்கத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்தவர்கள் வரும் 25-ம் தேதி முதல் டிக்கெட் வாங்கலாம். இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு 25, 30, 31 செப்டம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours