தலைநகர் டெல்லியில் செப்.9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டை உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் தற்போதுவரை நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் உட்பட பல தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வந்தடைய உள்ளார்.
ஆனால், இந்த மாபெரும் உச்சி மாநாட்டில் ஒரு சில நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதன்படி, சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை எனவும் பிரதமர் லி கியாங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு கலந்து கொள்ளும் எனவும் சீன வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது. அதே போல், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்காதது குறித்து ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த், “சீனா பலதரப்பு வீரர். பலதரப்பு விவாதங்களில், இருதரப்பு பிரச்சினைகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை மற்றும் சீனர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய பிரச்சினைகளை விவாதிக்கின்றனர். எந்தவொரு பலதரப்பு விவாதத்திற்கும் உள்ள சவால் என்னவென்றால், ஒவ்வொரு பிரச்சினையிலும் நீங்கள் ஒருமித்த கருத்தை கொண்டு வர வேண்டும், ஒவ்வொரு நாட்டிற்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு நாட்டுடனும் எங்களால் பணியாற்ற முடிந்தது” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours