மக்களவை தேர்தல் நெருக்கத்தில் ஜம்மு காஷ்மீர் எல்லை நெடுக ஊடுருவல் தொல்லை அதிகரித்திருப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விமரிசையில் தேசம் ஆழ்ந்திருக்கும்போது அவற்றினூடே பயங்கரவாத செயல்களை நிகழ்த்துடன் திட்டத்தோடு, ஜம்மு காஷ்மீர் எல்லை நெடுக பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்திருப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கோடும், வழக்கம்போல தேசத்தின் அமைதியை குலைக்கும் திட்டத்தோடும் இந்த ஊடுருவல் முயற்சிகள் தற்போது அதிகரித்துள்ளன. தேர்தல் மட்டுமன்றி, காஷ்மீரில் கொல்லும் குளிர் குறைந்து பனி உருகத் தொடங்கி இருப்பதாலும் ஊடுருவல்களுக்கு வாய்ப்பாகி உள்ளது.
எனினும் இவற்றை எதிர்பார்த்து எல்லையோரம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இன்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூரில், ஆயுதங்கள் ஏந்திய 4 பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் காஷ்மீர் எல்லைக்கான ஐஜி அசோக் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எல்லை கட்டுப்பாட்டுக் கோடு நெடுக பிஎஸ்எஃப் அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஒரு முக்கியமான நேரம் என்பதால், எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் முறியடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எல்லை தாண்டும் ஊடுருவல் முயற்சிகள் எல்லா காலத்திலும் உண்டு என்றபோதிலும், வரவிருக்கும் மக்களவை தேர்தல் போன்ற முக்கியமான தருணத்தில் அதற்கான வாய்ப்புகள் வெகுவாய் அதிகரித்துள்ளன. எனவே, ராணுவத்துடன் இணைந்து பிஎஸ்எஃப் விழிப்புடன் கடமையாற்றி வருகிறது. முக்கியமாக ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க ஏதுவான தயாரிப்புகளுடன் உள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த எல்லை நெடுக பயங்கரவாதிகள் ஊடுருவும் போக்கு காஷ்மீரில் பனி கரைய ஆரம்பிப்பதை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும். இதற்காக ராணுவத்தினர் மட்டுமன்று, காஷ்மீர் காவல்துறையுடன், எல்லை பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். அவற்றையும் கணித்து தற்போது வடக்கு, தெற்கு மற்றும் மத்திய காஷ்மீர் எல்லைகளில் பிஎஸ்எஃபின் 65 கம்பெனிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன” என்றும் பிஎஸ்எஃப் ஐஜி அசோக் யாதவ் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours