காங்கிரஸில் இணைந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி!

Spread the love

பஞ்சாபில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி குரீந்தர் சிங் தில்லான், ராகுல் மீதான அரசியல் ஈர்ப்பு காரணமாக விருப்ப ஓய்வுபெற்ற இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.

பஞ்சாபில் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரையின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரியான குரீந்தர் சிங் தில்லான். பிறகு ராகுல், அம்ரித்ஸரின் குருத்துவாரா பொற்கோயிலுக்கு வந்த போதும் பாதுகாப்பு பணியில் தில்லானே இருந்தார். 1997-ம் ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரியான தில்லான், தம் சொந்த மாநிலப் பிரிவில் சுமார் 24 வருடங்கள் பணியாற்றியவர். இவர், பஞ்சாபின் குருதாஸ்பூரிலுள்ள முலியன்வால் கிராமத்தைச் சேர்ந்தவர். கடைசியாக ஏடிஜிபி-யாகப் பணியாற்றிய இவர், கடந்த 24-ம் தேதி விருப்ப ஓய்வுபெற்றார். இந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

தில்லானுடன் அவரது மனைவியும் காங்கிரஸில் இணைந்துள்ளார். இவர்களது இணைப்பை ஏற்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான தேவேந்தர் யாதவ், கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சி டெல்லியில் உள்ள அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியில் தில்லானுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் தேவேந்தர் உறுதி அளித்துள்ளார். இது குறித்து பேசிய தில்லான், “ராகுலுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போது அவரது நடவடிக்கைகளை நெருக்கமாக இருந்து கவனித்தேன். அதில் வியந்து நானும் காங்கிரஸில் இணைந்து நாட்டிற்காகப் பணியாற்ற விரும்புகிறேன். பஞ்சாபிலேயே பிறந்து வளர்ந்து அம்மாநிலத்திலேயே பணியாற்றியதால் அங்குள்ள பிரச்சினைகள் என்ன என்பதை அறிவேன்” என்றார்.

பஞ்சாபின் ஜலந்தரிலிருந்து தனது பணியை துவக்கிய தில்லான், அம்மாநில உளவுப் பிரிவு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பலவற்றிலும் முக்கிய பதவிகளில் இருந்தவர். பஞ்சாபின் 13 தொகுதிகளுக்கு ஜுன் 1-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை பெரோஸ்பூரில் மட்டும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ், அங்கு தில்லானுக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours