டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவை, சிபிஐ தற்போது கைது செய்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை திருத்தத்தின் போது பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக ’சவுத் குரூப்’ என்ற நிறுவனத்தின் மூலமாக 100 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்து மதுபான நிறுவனங்களுக்கு சலுகை பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த மார்ச் 15ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்த சிபிஐ மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை அனுமதிக்க கூடாது என கவிதா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திகார் சிறையில் இருந்த கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் திகார் சிறையில் உள்ள கவிதாவிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் வழங்கி உள்ளனர். தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்த வழக்குகளில் கவிதா கைது செய்யப்பட்டு வருவது, பிஆர்எஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours