மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ் பிரிவு) தொகுதியை, அபகரித்ததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி- சஞ்சய் நிருபம், காங்கிரஸ் தலைமையை விமர்சித்ததால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் முன்னாள் எம்பி-யான சஞ்சய் நிருபம், தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், அங்கு மகா விகாஸ் அகாதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ் பிரிவு), மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இதில் சஞ்சய் நிருபம் ஏற்கெனவே எம்பி-யாக இருந்து வந்த மும்பை வடமேற்கு தொகுதி வேட்பாளரும் அறிவிக்கப் பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த சஞ்சயம் நிருபம், சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சிக்கு, மும்பை வடமேற்கு தொகுதியை விட்டுக்கொடுத்ததற்காக, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து சஞ்சய் நிருபம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடமிருந்து கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் நட்சத்திர வேட்பாளர் பட்டியலிலிருந்து சஞ்சய் நிருபத்தை நீக்கி நடவடிக்கை மேற்கொண்டது காங்கிரஸ் தலைமை.
மேலும், ஒழுக்கமின்மை மற்றும் கட்சி விரோத கருத்துகளை வெளியிட்ட புகாரின்பேரில், சஞ்சய் நிருபம் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று மாலை அறிவித்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சஞ்சய் நிருபம், ”நான் கட்சியிலிருந்து வெளியேறுவதாக கடிதம் அளித்த பிறகு என்னை நீக்கியுள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் சஞ்சய் நிருபம் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ’நேற்று இரவு எனது ராஜினாமா கடிதத்தை பெற்ற உடனேயே, அவர்கள் என்னை நீக்க முடிவு செய்தனர்’ என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மும்பை வடமேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற சஞ்சய் நிருபம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours