புதுடெல்லி: தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய யூடியூபர் மனிஷ் காஷ்யப் பாஜகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவில் இணைந்த பின் பேசிய மனிஷ் காஷ்யப், “இனி, தேசியத்துக்கு எதிரானவர்களுக்கும், சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும் எதிராக எனது போராட்டங்கள் அமையும்” என்று கூறியிருக்கிறார்.
பிஹாரைச் சேர்ந்த யூடியூபர் மனிஷ் காஷ்யப். இவர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் தமிழகம், பிஹாரில் பதற்றமான சூழல் உருவானது. பிஹார் அதிகாரிகள் தமிழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். அதையடுத்து, தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மனிஷ் காஷ்யப் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மனிஷ்காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மனிஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது சகோதரர் திரிபுவன் குமார் திவாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதனிடையே, மனிஷ் காஷ்யப் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு முழு நேர அரசியல்வாதியாகினார். புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி மற்றும் அனில் பலுனி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த பின் பேட்டியளித்த மனிஷ் காஷ்யப், “மனோஜ் திவாரியுடன் பிஹாரில் இருந்து வந்தேன். அவரால்தான் நான் சிறையில் இருந்து விடுதலையாக முடிந்தது. என் வாழ்க்கையின் மோசமான காலகட்டம் முடிந்துவிட்டது. அதனால் தான் பாஜகவில் இணைத்துள்ளேன்.
பிஹாரில் சில கட்சிகள் உள்ளன. சூட்கேஸ் நிறைய பணத்துடன் சென்றால் மட்டுமே, அந்தக் கட்சிகளில் சேர முடியும். ஆனால், ஏழைக் குடும்பத்தின் மகனான என்னை மதித்து பாஜக இந்த மரியாதையை வழங்கி கட்சியில் இணைத்துள்ளது. ஏழைகள், பெண்கள், யூடியூபர் என ஒவ்வொருவரையும் மதிக்கும் கட்சி பாஜக. ஒரு வித்தியாசமான கட்சி பாஜக. அதனால்தான் உலகின் மிகப் பெரிய திறமையான கட்சியாக அக்கட்சி உருவெடுத்துள்ளது.
தேசியவாதத்துக்காக இதுவரை செய்துவந்த எனது பணியை தொடர்ந்து செய்வேன். இதற்கு முன்பு இதே பணிகளை செய்தபோது சில கட்சிகள் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தன. அந்த தருணங்களில் பல பாஜக தலைவர்கள் எனக்கு ஆதரவளித்தனர். இப்போது, நான் பாதுகாப்பாக சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாவின் ஆசியும், பாஜக தலைவர்களின் ஆதரவும்தான் காரணம்.
லாலு குடும்பம் பிஹாரை சுரண்டிவிட்டது. இப்போது பிஹாரை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே, பிஹாரை வலுப்படுத்தும் பணியில் இனி பாஜகவுடன் இணைந்து செயல்படுவேன். என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பாட்னா நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி, விடுதலை செய்தது. என் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டமும் வாபஸ் பெறப்பட்டது. இனி, தேசியத்துக்கு எதிரானவர்களுக்கும், சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும் எதிராக எனது போராட்டங்கள் அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours