கனிமொழிக்காக வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின் !

Spread the love

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று (மார்ச் 26) காலை வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மனுத்தாகல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது. இதுதவிர, நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிக்கு ராமநாதபுரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம், விசிகவுக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முதற்கட்டமாக திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரிக்கு முன்னாள் எம்எல்ஏ கே.கோபிநாத், கரூருக்கு ஜோதிமணி, கடலூருக்கு விஷ்ணு பிரசாத், சிவகங்கைக்கு கார்த்தி சிதம்பரம், விருதுநகருக்கு மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரிக்கு விஜய் வசந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 25) திருநெல்வேலி- ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என்றும், விளவங்கோடு இடைத் தேர்தலில் தாரகை கட்பர்ட் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இன்று இரவுக்கு மயிலாடுதுறை அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours