சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு இருந்த கொடிக்கம்பத்தை அகற்றியபோது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கரு.நாகராஜன் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஈசிஆர் பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜகவினர் சுமார் 50 அடி உயர பாஜக கொடிக்கம்பத்தை அமைத்துள்ளனர். இந்த கொடிக்கம்பத்தை பாஜகவினர் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அனுமதியின்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜகவினர் கொடிக்கம்பத்தை அமைத்துள்ளதற்கு அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினரும் அப்பகுதியில் கூடினர். இதனால் இரவு சுமார் 10 மணி முதல் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த சமயத்தில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதேவேளையில் பாஜகவினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அப்போது, பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் மற்றும் மாநகராட்சி அதிகரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபியை காவல்துறை வரவழைத்த நிலையில், ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபி கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், காவல்துறைக்கும் பாஜகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் போலீசார் கைது செய்தனர். பாஜகவின் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்பின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர். இந்த நிலையில், கொடிக்கம்பத்தை அகற்றியபோது போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கரு.நாகராஜன் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கானாத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours