புதிய கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்கள்
- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்திருந்தன.
- மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 296 முதல் 326 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இதற்காக மாறுபட்ட கொள்கைகள் உடைய எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைந்து உள்ளன. அவர்களது கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் முதலில் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். பிறகு பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்து மும்பையில் இந்த மாத இறுதியில் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அடுத்தகட்ட நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதை முறியடிக்கும் வகையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி பேசுகையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அதற்கு மறுநாளே (16-ந்தேதி) புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:-
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடத்தினால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நாடு முழுவதும் மக்களிடம்கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சி அமைக்க மக்களிடம் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 296 முதல் 326 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், பா.ஜனதா கூட்டணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சற்று சறுக்கல் என்றே சொல்ல வேண்டும்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்திருந்தன. கருத்துக் கணிப்பில் 326 இடங்கள் கிடைக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே 27 இடங்கள் குறையக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மக்களிடம் அதிகளவு ஆதரவு இல்லை என்பது கருத்துக்கணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடந்தால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மொத்தம் 160 முதல் 190 இடங்கள் கிடைக்கவே வாய்ப்புகள் உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை விட அதிக ஆதரவு இருப்பதும் கருத்துக் கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் தற்போது தேர்தல் வைத்தால் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 57.2 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 30 முதல் 34 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 27.8 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த கூட்டணிக்கு 4 முதல் 8 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டு இருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணிக்கு 20 இடங்களிலும், இந்தியா கூட்டணிக்கு 10 இடங்களிலும் வெற்றி கிடைப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 16 முதல் 18 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அங்கு பா.ஜனதா மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளை தவறவிட வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராகுலின் இந்தியா ஒற்றுமை யாத்திரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பிரதமர் மோடியின் வளர்ந்த இந்தியா கோஷம் மக்களை கவர்ந்துள்ளது.
இதன் காரணமாகவே இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு 80 சதவீத வெற்றி விகிதம் இருப்பதை கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours