ராமநாதபுரத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எழுதிய ‘The Crooked Timber of New India‘ என்ற நூலை மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் அனைவரும் படிக்க வேண்டுமென்று குறிப்பிட்டார்.
யார் இந்த ப்ரகலா பிரபாகர் :
சரி, இப்போது பரகால பிரபாகர் பற்றியும் அவரது நூல் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்:
ப்ரகால பிரபாகர் பரவலாக மதிக்கப்படும் அரசியல் பொருளாதார நிபுணர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்த பிரபாகர்,2014 முதல் 2018 காலகட்டம்வரை ஆந்திர முதலமைச்சரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர்.இவரது தாய் பரகால காளிகாம்பாள் ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர், தந்தை பரகால சேஷாவதாரம் ஆந்திர அமைச்சராகவும் இருந்தவர்.ஆனால் பரகால பிரபாகர் நடுநிலையான பொருளாதார விமர்சகராகவே அறியப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளாக பரகால பிரபாகர் மத்திய பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதி வருகிறார். எனவே அவரை காங்கிரஸ் ஆதரவாளராக முத்திரை குத்துகின்றனர் 2020ஆம் ஆண்டிற்கும் 2022ஆம் ஆண்டிற்கும் இடையில் இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis’ என்ற பெயரில் சமீபத்தில் நூலாக வெளியானது.
கோணலான மரம்:
ஜெர்மன் தத்துவ மேதையான இம்மானுவேல் கன்ட்டின் புகழ்பெற்ற மேற்கோளில் இருந்து இந்தப் புத்தகத்தின் தலைப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. ‘கோணலான மரத்திலிருந்து நேரான எதுவும் உருவானதில்லை’ என்பதுதான் அந்த மேற்கோள். புதிய இந்தியாவின் கோணல் மரங்களில் இருந்து நேரான எதுவும் உருவாகப் போவதில்லை என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி. மொத்தமாக 22 கட்டுரைகளைக் கொண்ட இந்தப் புத்தகம், பா.ஜ.க. தலைமையிலான கடந்த ஒன்பதாண்டு ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறது.
நரேந்திர மோதி – அமித் ஷா தலைமையின் கீழ் பா.ஜ.க. வந்த பிறகு அந்தக் கட்சி அடைந்திருக்கும் மாற்றம், அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா அடைந்திருக்கும் மாற்றம், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பரவல், மக்கள் தொகையை வைத்து பா.ஜ.க. செய்யும் அரசியல், இந்தியாவில் உள்ள வேலையில்லா பிரச்னை, ஹிஜாப் விவகாரம், ஆக்ஸ்ஃபாம் அறிக்கை, ஸ்டான் ஸ்வாமியின் மரணம், விவசாய சட்டங்கள், லக்கிம்பூர் கேரி சம்பவம், கோவிட் பரவலை அரசு கையாண்ட விதம் எனப் பல்வேறு விஷயங்களை முன்வைத்து அரசைக் கடுமையாக விமர்சிக்கிறது இந்தப் புத்தகம்.
கட்டற்ற அதிகாரத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் இடங்களில் வரித்துறை அதிகாரிகள் மூலம் ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது, அமலாக்கத் துறையினர் அவர்களைப் பிடித்துவைத்து பல மணிநேரம் கேள்வி எழுப்புவது, விசாரணை இன்றி சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டுகிறார். அரசின் சொல்படி கேட்காத ஊடக நிறுவனங்களுக்கு வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்புவதோடு, நிதி முறைகேடுகளுக்காக விசாரணையும் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார் பிரபாகர்.
இந்தப் புத்தகத்தின் மையக் கருத்து, இந்தியா தற்போது அரசமைப்பைக் காப்பாற்றுவதில் துவங்கி பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இந்த நிலைக்கு இந்தியா எப்படி வந்தடைந்தது என்பதைத்தான் பல்வேறு கட்டுரைகளின் மூலமாகச் சொல்கிறார் பரகால பிரபாகர்.
கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் பிரபாகர், அதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார். அதாவது 2015-16ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பின்மை புள்ளிவிவரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 5%ஆக உயர்ந்திருந்ததே இதற்குக் காரணம் என்கிறார் அவர். 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக 7.5 கோடி போ் ஏழைகளாகியிருப்பதாக பிரபாகர் கூறுகிறார். யுஎன்டிபியின் உலக மனித வளர்ச்சி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 132வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதையும் உலகப் பட்டினிக் குறியீட்டில் 107வது இடத்தில் இருப்பதையும் பரகால குறிப்பிடுகிறார்.
கடந்த 2014ல் பேசும்போது அடிக்கடி Team India என்று குறிப்பிட்ட பிரதமர், 2016க்குப் பிறகு Team India குறித்துப் பேசுவதே இல்லை என்பது புத்தகத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. அதேபோல, 2014ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில், “இந்தியா சுதந்திரமடைந்து கடந்த 70 ஆண்டுகளில் பல மகத்தான விஷயங்கள் நடந்திருக்கின்றன” என்று குறிப்பிட்ட பிரதமர், தற்போது “கடந்த எழுபதாண்டுகளில் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறுவதை எப்படிப் புரிந்துகொள்வது என்கிறார் பிரபாகர்.
அதேநேரத்தில் இந்த நிலைமைகளுக்கு காரணம் காங்கிரஸ் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பிற அரசியல் கட்சிகளும் இதற்கு பொறுப்பு என்கிறது அவரது
கட்டுரைகளில் ஒன்று. ‘இந்தியாவை இதற்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகள் அரசியல் சாசனம் வலியுறுத்தும் கொள்கைகளைப் பரப்பாதது, அந்த அடிப்படைகளை யாராலும் அசைக்க முடியாது என்ற அலட்சியத்தில் இருந்தது, அவற்றைப் பாதுகாக்கப் பெரிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை என்று நினைத்தது ஆகியவை இன்றைய இந்த நிலைக்குக் காரணம்.’
பா.ஜ.க. அடுத்த தேர்தலில் தோல்வியுற்றால், உடனடியாக எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் அந்தளவுக்கு கடந்த ஒன்பதாண்டுகளில் விதை விதைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தியா ஒரே ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கான நாடு என்றும் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாம் தர குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்ற கருத்து மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது என்றும் சுட்டிக்காட்டுகிறார் பிரபாகர்.
உடனடிப் பலன்களையோ, உடனடியான தேர்தல் வெற்றிகளையோ எதிர்பார்க்காத, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை நம்பும் ஓர் அரசியல் கட்சி மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் என்று கூறும் பிரபாகர், ஆனால் அப்படியான சூழலே இல்லை என்பதுதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
+ There are no comments
Add yours