இயற்கை நமக்களித்திருக்கும் முக்கிய கொடைகளில் ஒன்று அலையாத்தி எனப்படும் சதுப்பு நிலக்காடுகள். மூன்று பக்கமும் சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ள இந்தியாவில் பாயும் ஜீவ நதிகள் இந்த அலையாத்திகளை தோற்றுவிக்கின்றன. நன்னீரும் உவர்நீரும் கலக்கும் ஆற்று முகத்துவாரங்களில் இந்த அலையாத்திகள் செழித்து வளருகின்றன.
மாங்குரோவ் காடுகள் என்று பரவலாக அறியப்படும் இந்தக் காடுகள், இந்தியாவில் அதிகமாக குறிப்பாக வங்காள விரிகுடா முகத்துவாரங்களில் அதிகம் காணப்படுகிறது. மாநில வன அறிக்கை 2021 இன் படி, தெற்காசியாவில் உள்ள மொத்த சதுப்பு நிலப்பரப்பில் சுமார் 3 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது, இதன் மொத்த சதுப்பு நிலப்பரப்பு 4 ஆயிரத்து 975 சதுர கிமீ ஆகும், அதாவது நாட்டின் மொத்த புவியியல் பரப்பில் 0.15 சதவீதம். மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர்வனக் காடுகள்தான் உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகள் என்பது இந்தியாவிற்கு இயற்கை அளித்துள்ள மாபெரும் கொடை இந்த அலையாத்திக் காடுகள்.
சிவப்பு மாங்குரோவ், அவிசெனியா மெரினா, சாம்பல் மாங்குரோவ், ரைசோபோரா போன்றவை சில பொதுவான சதுப்புநில மரங்கள் ஆகும். தமிழ்நாட்டின் பிச்சாவரம், முத்துப்பேட்டை, தொண்டி உள்ளிட்டப் பகுதிகளில் அலையாத்திக் காடுகள் பரந்து விரிந்து வேரூன்றியுள்ளன. கடலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் ஆழிப்பேரலைகளை ஆசுவாசப்படுத்தும் சக்தி கொண்டவை இந்த அலையாத்திகள். அதனால்தான் சுனாமியின்போது, அலையாத்திக் காடுகள் இருந்தப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உயிர்கோள பன்முகத்தன்மையை சமன்செய்வதில் அளப்பரிய பங்காற்றுகின்றன. அலையாத்தியின் வேர்கள் நத்தை, நண்டு, சிங்கி இறால், ஆக்காட்டி குருவி, வெண்கொக்கு, பல்வேறு மீனினங்கள் ஆகியவற்றுக்கு புகலிடமாக இந்த அலையாத்திகள் திகழ்கின்றன. மேலும், சதுப்புநிலக் காடுகள் கார்பனை அதிகமாக உறிஞ்சி, புவி வெப்பமடைவதைத் தணிக்க உதவுகின்றன.
மீன் வளர்ப்பு, தேன் சேகரிப்பு மற்றும் படகு சவாரி என பல விதங்களில் அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தில் அலையாத்திக் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அலையாத்திக் காடுகள் கடல் மாசுபடுதல், விறகிற்காக மரங்கள் வெட்டப்படுத்தல் ஆகிய காரணங்களால் அழிந்து வருகின்றன. இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட அலையாத்திக் காடுகளை பாதுகாக்க நாம் இன்றே ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் இன்று உலக அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு தினம்!!
+ There are no comments
Add yours