சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு 500 விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், வடபழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த விழாவாக, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோயில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட, விநாயகர் சிலைகள், எருக்கம் மாலை, அருகம்புல், பூஜை வழிபாட்டு முறைகள் அடங்கிய கையேடு, ஆகியவை அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வடபழனி முருகன் கோயிலில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, விநாயகப் பெருமானுக்கு அனைத்து திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று இரவு வரசித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்துடன் மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயக சதுர்த்தியில் இருந்து, 9-வது நாளில் கணேஷ் விசர்ஜன் பூஜை செய்யப்படுகிறது. அனந்த் சதுர்த்தசி தினமான இந்த நாள் கணேஷ் விசர்ஜன் தினம் என்று அழைக்கப்படுகிறது. அன்று அனைவரும் ஒருங்கிணைந்து, வடபழனி முருகன் கோயில் குளத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
+ There are no comments
Add yours