காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 4 டன் எடை கொண்ட தேர் நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் மாகாணம் சியாடில் நகரில் வேதா என்ற கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு புகழ் பெற்ற ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட தேரை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தில் ஆன்மிக பொருட்களை தயார் செய்யும் நிறுவனத்துக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிர உலோகங்களை பயன்படுத்தி தங்க முலாம் பூசப்பட்ட தேரை அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த தேர் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேரை 35 டிகிரி அளவுக்கு திருப்பும் வகையில் தொழில் நுட்பம் உள்ளது. வேறு இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில் 6 பாகங்களாக பிரிக்க முடியும். சிவபெருமான், மகா விஷ்ணு என எந்த கடவுளுக்கும் பயன்படுத்தும் வகையில் பொம்மைகளை பொருத்திக் கொள்ளலாம்.
இதன் மதிப்பு ரூ.1.25 கோடி. இந்தத் தொகையை சியாடில் நகரில் உள்ள வேதா கோயில் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இந்த தேர் 6 பாகமாக பிரிக்கப்பட்டு நேற்று (ஆக.31-ம் தேதி) விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பப்பட்டது.
+ There are no comments
Add yours